தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

ETV Bharat / state

நவராத்திரி விழா: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி! - Navratri festival

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவிற்கு 3 சாமி சிலைகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இரு மாநில காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் எடுத்து செல்லப்பட்டன.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

கன்னியாகுமரி:திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டு அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் செல்லும் 3 சாமி சிலைகள்:அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பல்லக்கில் சுமந்து ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும். அங்கு 10 நாட்கள் நவராத்திரி விழாவில் பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி:ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா குமரி மாவட்டத்தில் முக்கிய விழாவாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 3 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக சுசீந்திரம் முன்னு தித்தநங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளை எடுத்து, கேரள அறநிலையத்துறை அமைச்சர் வாசவன் முன்னிலையில் கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன் குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் பழனி குமாரிடம் ஒப்படைத்தார்.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:களைகட்டிய நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி.. அதியமான்கோட்டைக்கு படையெடுக்கும் வியாபாரிகள்!

அவர் அதனை வாங்கி அரண்மனை ஊழியரிடம் கொத்தார். அதனை தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பல்லாக்கிலும், குமாரகோயில் வேளிமலை முருகன் வெள்ளி குதிரை வாகனத்திலும், தேவார கட்டு சரஸ்வதி அம்மன் யானையிலும் எழுந்தருளியது. பின்னர் 3 விக்ரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தமிழக, கேரள போலீசார் அணிவகுத்து நின்று துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் அரிசி காணிக்கையுடன் சாமி சிலைகள் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றது. பக்தர்கள் மலர் தூவி வழியனுப்பி வைத்தனர். மேலும் நவராத்ரி பூஜைகள் முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும். இதற்கான ஏற்பாடுகளைக் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், கேரள அரசும் இணைந்து செய்து உள்ளது.

சாமி சிலைகள் ஊர்வலத்திற்கு வழி நெடுக பக்தர்கள் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இரு மாநில தேவசம் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details