தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? - விஜயை மறைமுகமாக சாடிய கனிமொழி எம்.பி.! - KANIMOZHI MP ABOUT VIJAY

மணிப்பூரையும், தமிழ்நாட்டையும் ஒப்பீட்டு பேசுவது, மேடையில் ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என தூத்துக்குடி எம்.பி கனிமொழி தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.

கனிமொழி
கனிமொழி (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 8:16 PM IST

Updated : Dec 8, 2024, 9:43 PM IST

சென்னை:சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "திமுக கூட்டணி கட்சிகள் குறித்து பேச விரும்பவில்லை. புத்தக விழாவில் பேசியதற்கு திருமாவளவன் தெளிவாக விளக்கம் கேட்கப்படும் என அறிவித்து உள்ளார். அவர் எடுக்கும் நடவடிக்கை தான் சரியாக இருக்கும். அது பற்றி நான் விமர்சனம் செய்வது சரியாக இருக்காது.

மணிப்பூருக்கு நான் சென்று உள்ளேன். எத்தனை பேர் சென்று உள்ளார்கள் என்று தெரியவில்லை. மணிப்பூரையும், தமிழ் நாட்டையும் ஒப்பீட்டு பேசுவது, மேடையில் ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

எம்.பி கனிமொழி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

மணிப்பூரில் பிரச்னை என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை வந்து trivialize செய்வது நியாயமில்லை. இது பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட மோசமானது" என்று கூறினார்.

முன்னதாக, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க :"கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!

விழா மேடையில் பேசிய விஜய், "இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று நாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுக்கவே கண்டுக்காத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆளுகின்றது.

அதேபோல் தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்கின்ற கிராமத்தில் என்ன நடந்தது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். சமூக நீதி பேசுகின்ற இங்கிருக்க கூடிய அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இவ்வளவு காலங்கள், இவ்வளவு வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போட முடியவில்லை.

மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான்.கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சி சார்ந்து எவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவருடைய மனது முழுக்க முழுக்க இன்றைக்கு இங்குதான் இருக்கும்" என்று பேசினார். இவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 8, 2024, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details