தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் களம் காண்பவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர். சிவசாமி வேலுமணியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில், ஆர். சிவசாமி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவருடன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி சண்முகநாதன், வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு, மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த செல்ல பாண்டியன் உடனிருந்தனர். பின்னர், தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வாய்ப்பு கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் அமைச்சர்கள் தொடர்ச்சியாக, சிறைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த வழியில் இங்கு எதிர் வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் கனிமொழி மீது உச்சநீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மக்கள் மிகவும் படித்தவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள், விரைவில் திமுக வேட்பாளர் சிறை செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே வாக்குகளை அதிமுக சின்னம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன்” என்றார். மேலும், தொடர்ந்து பேசியவர், “நாளை (மார்ச் 26) மாலை 4 மணிக்கு விவிடி சிக்னலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் நடைபெற உள்ளது.அந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து திட்டங்களையும் பொதுச்செயலாளர் அறிவிப்பார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 9.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்! - 10th Public Exam