தூத்துக்குடி:சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்பி கனிமொழிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் திமுக தேர்தல் வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கனிமொழி எம்பி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். அவருக்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் விமான நிலைய வாயிலில் மேள,தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்.
பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,"தூத்துக்குடியில் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி. தூத்துக்குடி பகுதியில் தண்ணீர் பிரச்சினையைச் சரி செய்வதற்காக 363 கிராமங்களை உள்ளடக்கிய தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று அதை நிறைவடையக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது.
அதேபோல, திருச்செந்தூர் தொகுதி சாத்தான்குளம் பகுதிகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகத் திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அந்த திட்டம் நிறைவேற்றித் தரப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் தொழில் நிறுவனத்திற்கு 16,000 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற முடிவு செய்து இருக்கிறார்கள் என்றார்.