கரூர்:தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, இன்று இந்தியா கூட்டணியில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய கனிமொழி, “கரூர் நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் என்னுடைய தோழி ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்கு அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை. இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒன்றிய மோடி ஆட்சி இன்றைக்கு இந்த நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து, மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அந்த சண்டையில் வரக்கூடிய ஆபத்தான அரசியலை வைத்து ஓட்டு வாங்கி ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். மணிப்பூரில் இன்னும் பிரச்னை சீராகவில்லை, மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தான் உள்ளனர், முகாம்களில் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்கள்.
பெரியவர்களுக்கு மருந்து மாத்திரை கிடைக்கவில்லை, சாப்பாடு கிடையாது என்ற பயத்தோடு அங்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அங்கே அவமானப்படுத்தப்பட்டு, பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலையை நாம் பார்த்தோம்.
இதுவரை அங்கு சென்று மக்களை பிரதமர் சந்திக்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் நாங்கள், அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து இருக்கிறோம். புயல் வெள்ளத்தினால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது வந்து பார்க்காத பிரதமர் மோடி, மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து எட்டிப் பார்க்காத பிரதமர், தேர்தல் என்று வந்தால் 10 நாட்கள் இங்கு தான் இருந்தார்.
காங்கிரஸ், திமுக கூட்டணி ஒன்றியத்தில் இருந்த போது, 100 நாட்கள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இவர்கள் 100 நாள் திட்டம் மக்களுக்கு 30 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை. பணத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு 68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால், 100 நாட்கள் வேலை திட்டத்தில் மூலம் மக்களுக்கு வேலை வழங்க நிதி இல்லையாம்.
அடிப்படை விலை வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களை ட்ரோன், ஆயுதம் கொண்டு தாக்கினர். பாலியல் குற்றங்களுக்கு உள்ளான 44 பேர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளனர், ப்ரிஜ் பூஷன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது மல்யுத்த வீராங்கனை பாலியில் வன்கொடுமை புகார் அளித்து போராட்டம் நடத்தினர். அந்த வீரர் வீராங்கனை காவல்துறை என்ன செய்து என்று நாம் அனைவருக்கும் தெரியும்.
ஒருவருக்கு ஜாமீன் என்பது அடிப்படையான ஒன்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இத்தனை மாதம் ஆகியும் ஜாமீன் வழங்கவில்லை. இந்தியாவில் 2 முதலமைச்சர்கள் அலமக்கத்துறையினரால் ஒன்றிய அரசு கைது செய்துள்ளது. 90 சதவீத அமலாக்கத்துறை எதிர்கட்சியினர் மீது தான் வழக்குப் போட்டுள்ளனர்.
100 பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள், 355 கோடியில் நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள், 587 கோடியில் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டம், மற்றும் ஜவுளி உற்பத்தி பொருட்கள் மேம்பாட்டு அலை உள்ளிட்ட பல திட்டங்களை ஜோதிமணி கொண்டு வந்துள்ளார்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சமையல் கேஸ் 500 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய் விற்பனை செய்யப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டம் , 150 நாட்களாக மாற்றப்படும், வேலை நாள் சம்பளம் 400 ரூபாய் வழங்கப்படும் என்று நாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார், மேலும் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது” என்றார்.
இதையும் படிங்க:பம்பரம் சின்னத்தில் வாக்கு கேட்ட சி.வி.சண்முகம்! தேமுதிக வேட்பாளர் அதிர்ச்சி - Cv Shanmugam