தூத்துக்குடி: திமுக சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக, தூத்துக்குடியின் தற்போதைய சிட்டிங் எம்.பியாக செயல்படும் கனிமொழியே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் வாயிலில் அமைந்திருக்கும் முன்னால் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, இன்று (மார்ச் 24) பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அப்போது திறந்த வெளி வாகனத்தில் நின்று திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில், "தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடு. மறுபடியும் இங்கு வெற்றி பெற்று உங்களோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பை நீங்கள் எனக்கு அளிக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த 'நாடும் நமதே, 40ம் நமதே' என்ற நிலையை உருவாக்கிக் காட்ட வேண்டும்.
ஏனென்றால், தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நியாயமான திட்டங்களை நமக்குத் தராமல், வெள்ள நிவாரணத்தைக் கூட நமக்கு நிதி வழங்காமல், நம்மை வஞ்சித்திருக்கக்கூடிய மத்திய பாஜக அரசை, இந்த நாட்டில் இருந்து அகற்ற வேண்டும். மத்திய ஆட்சியில் இருந்து அவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, இந்த தேர்தலிலே நாம் பணியாற்ற வேண்டும்.
பிரதமர் வெள்ளத்தின் போது மக்களைப் பார்க்க வரவில்லை. ஆனால், தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகின்றார். திமுகவை இல்லாமல் ஆக்கி விடுவோம் என்று அறைக்கூவல் விட்டுக் கொண்டிருக்கின்றார். இத்தனை ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக் கழகத்தை இல்லாமல் செய்து விடுவோம் என்று சொல்லி இருக்கின்ற பல பேரை நாம் சந்தித்திருக்கின்றோம். தற்போது, அவர்கள் எங்கே என்று தேடக்கூடிய நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட மாடல் ஆட்சியை இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்கக்கூடிய ஆட்சியாக முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் திட்டத்தையும், காலை உணவுத் திட்டத்தையும் நாடு முழுவதும் அமல்படுத்த இருக்கின்றோம்.