தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தேர்தல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் வந்தாலே அரசியல்வாதிகள் ஓட்டுக்காக பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்.
அப்போது எதிர்க்கட்சிகள் தங்களது நூதன விளம்பரம் மூலம், மக்களின் பார்வையை திசைத்திருப்பி தங்களுக்கு ஆதரவாக ஓட்டுக்களை சேகரிக்க போட்டி போட்டுக் கொள்வர். இதற்காக பல்வேறு வசனங்களையும் அச்சடித்து தங்களது வெற்றியை விமர்சங்கள் மூலமாகவே சில அரசியல் கட்சியினர் தேடிக் கொள்வர். அந்தவகையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற தலைப்பைக் கொண்ட போஸ்டர்கள் வீதிகள் தோறும் ஒட்டப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சாவூரின் முக்கிய பகுதிகளில் 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற தலைப்பில் போஸ்டர் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடல் வரியை போஸ்டரில் அச்சடித்து ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டரை யார் அச்சடித்து ஒட்டினர்? என்ற விபரம் ஏதும் இல்லை. தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.