தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும், தொகுதிப் பங்கீடு வேலையும் தீவிரமாகி வருகிறது. இதனிடையே தேர்தல் தொடர்பாக வேலைகளும், பிரச்சாரங்களும் என தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிக்கள் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் குறிப்பிடும் வகையிலும் 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற போஸ்டர் பிரச்சார வியூகத்தை அதிமுக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த போஸ்டர் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், அந்தந்த எம்பி தொகுதிகள் என அச்சிடப்பட்டு இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இது போன்ற போஸ்டர்கள் திமுக எம்பிக்களை கலக்கத்தில் ஆழ்த்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போது இந்த போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று (மார்ச் 1) தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என்ற பெயரில், 'தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை, கண்டா வர சொல்லுங்க' என்ற போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.