சென்னை:ஒன்றிய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர் என வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஏப்.06) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திறந்தவெளி வாகனத்தில் மக்களிடையே பேசிய கமல்ஹாசன், “இங்குப் பறந்து கொண்டிருக்கும் அத்தனை கொடிகளும், ஒரு கோடி பறப்பதற்காகப் பறந்து கொண்டிருக்கிறது, அது நம் தேசியக்கொடி. நம் ஜனநாயகத்தின் அடையாளமாக ஒரு கொடி பறந்தே ஆக வேண்டும், அதற்காக இத்தனை கொடிகளும் பறந்து கொண்டிருக்கிறது.
ஆளை அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்தை அடிக்கலாம்: தமிழச்சி தங்கபாண்டியனின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. நாடு முழுவதும் இது போன்ற குரல் ஒலிக்க வேண்டும். இவரது கரோனா கால செயல்பாடுகள் பலரால் பாராட்டப்பட்டது. வலிமை தமிழச்சி என்ற முகாமை நடத்திப் பல பெண்களின் மேம்பாட்டுக்கு எல்லா உதவிகளையும் செய்துள்ளார்.
குஜராத் மாடல் தான் சிறப்பு, திராவிட மாடல் எல்லாம் ஒன்றுமில்லை என இனிமேலும் சொல்ல முடியாது. அந்தப் பொய்க்கு அற்புதமான மலர் வளையம் வைத்துள்ளார் முதல்வர். அதுவும் தாமரைப் பூக்களால் ஆன மலர் வளையம்.
என்னுடைய நாயகன் திரைப்படத்தில் ‘அடித்தால் தான் அடியிலிருந்து தப்ப முடியும்’ என்ற ஒரு வசனம் வரும், அதுபோல ஜனநாயக நாட்டில் ஆளை அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடைய சித்தாந்தத்தை அடிக்கலாம். அப்படித் திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது எனது கடமை: வறுமையைத் திருப்பி அடித்துக் கொண்டிருக்கிறார், கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மையை அடித்துக் கொண்டிருக்கிறார், முக்கியமாகச் சர்வாதிகாரத்தைத் திருப்பி அடிக்க துணிந்திருக்கிறார். அதனாலே என்னைப் போன்ற ஆட்கள் இங்கு வந்து நிற்கிறோம். நீங்கள் அவர்களை விமர்சனம் செய்தீர்களே என கேட்டால் விமர்சனம் செய்வது எனது கடமை, ஏன் உங்களது கடமையும், ஆபத்தென்று வரும் போது ஜனநாயக தேரை இழுக்க வேண்டியது எனது கடமை, நமது கடமை.
உங்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பத்தாது தான், ஆனால் அங்கு ஒருத்தர் ஒருவருக்கு ஆயிரம் கோடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்குக் கோடி பேருக்கு ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு ஆயிரம் கோடியைக் கொடுக்கும் மேஜிக்கை இந்த தெருவிலும் காட்டலாமே? இங்கு ஒரு லட்சம் பேர் கோடீஸ்வரர் ஆவார்கள்.
அந்த 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்:நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவைத் திருப்பிக் கொடுக்கின்றனர், ஆனால் அந்த 29 பைசாவை வைத்துத் தான் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தவில்லை, செய்தால் இந்தியாவே மேம்படும். பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் எப்படி இருக்கும், ஆனால் அதைச் செய்யவில்லையே.