திருச்சி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நேற்று (செவ்வாய்கிழமை) திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், "தமிழ், தெலுங்கு, சௌராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஊர், திருச்சி. இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும், தமிழ்நாட்டில் அது மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகையாகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.
நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான், நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதைப் படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமை சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்கத் தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை.