சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சந்தேகமான முறையில் இறந்தார். இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தின் போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தி மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மாணவியின் தாயார் செல்வி அளித்த கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக, மாணவியின் தாயார் செல்வி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
மாணவியின் தாய் புகார்: அதில், "எனது மகள் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம் மற்றும் அதைச் சார்ந்தவர்களால் கூட்டு சதியின் மூலம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டாள். இது தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. எனது மகள் இறப்புக்கு நீதி கேட்டு சட்டப்போரட்டங்களை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் பல்வேறு யூடியூப் சேனல்களில் யூடியூபர் சவுக்கு சங்கர் கலந்து கொண்டு, உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பொய்களை பரப்பி வந்துள்ளார். 17 வயது மகளை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் பல பேட்டிகள் கொடுத்தார்'.
மாணவியின் தாயார் செல்வி அளித்த கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu) காதல் விவகாரம்: சவுக்கு சங்கருக்கு உரிமையான சவுக்கு மீடியா என்னும் யூடியூப் சேனலில் எனது மகள் மீனவ சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவனைக் காதலிப்பதாக பொய்யாக சவுக்கு சங்கர் பேசி வந்தார். காதலுக்காக நான் என் மகளைக் கடிந்து கொண்டதாகச் சொல்லி, எனக்கு சாதிய நோக்கம் கற்பித்து பேசியது மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியது.
பணம் பெற்றுக் கொண்டு சதி: அவரின் மரணத்துக்கு நான்தான் காரணம், என்னைத்தான் கைது செய்ய வேண்டும். என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் மறைந்த என் 17 வயது மகளைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் சவுக்கு சங்கர் தொடர்ந்து பேசி வந்தார்.
மாணவியின் தாயார் செல்வி அளித்த கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu) இத்தனை நாட்கள் சவுக்கு சங்கர் என்னைப் பற்றியும், எனது 17 வயது மகள் பற்றியும் பள்ளி நிர்வாகிகளான ரவிக்குமார் சாந்தி, சிவசங்கரன் ஆகியோரிடம் பணம் பெற்றுக் கொண்டு திட்டமிட்டு பேசியிருப்பது அவரின் உதவியாளர் பிரதீப்பின் சமீபத்திய பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது'.
சவுக்கு சங்கர் ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகத்திடம் பெரும் தொகை பெற்றுக் கொண்டு, என் 17 வயது மகள் பற்றி, என்னைப் பற்றி, என் குடும்பத்தாரைப் பற்றி இழிவுபடுத்தியும் கொச்சைப்படுத்தியும் பேசுவதற்காக பணிக்கப்பட்டார் என்று பிரதீப் பேட்டியளித்தார்.
இந்த தகவலை நான் சமூக வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். ஊடக நெறியைக் கெடுக்கும் வண்ணம் பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி, சிவசங்கரன் ஆகியோருடன் சவுக்கு சங்கர் கூட்டுச் சதி செய்து, தெரிந்தே அவதூறான செய்திகள் பரப்பி உள்ளார்.
இறந்து போன எனது மகள், எங்கள் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி, இழிவுபடுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய சவுக்கு சங்கர் மீது சென்னை காவவல்துறை உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மாணவியின் தாயார் செல்வி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சவுக்கு சங்கருக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா?” - தேனி போலீசாரிடம் சவுக்கு சங்கர் அளித்த பதில்?