கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதில், சிலர் சேலம்,, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி, 34 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகவும், மேலும், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்த பிரவீன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரின் உடல்கள் கருணாபுரம் பகுதியில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர் சுரேஷ்குமார் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் தெளிவான விளக்கம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் மேற்கண்ட இருவரும் தங்களுக்கு கண் பார்வை போய்விட்டது. வயிற்றுப்போக்கு, உடல் எரிச்சல் ஆகியவை உள்ளதாக தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்து வந்தனர்.
மெத்தனால் கலந்த சாராயம்:இவர்கள் தெரிவித்த பின்னரும் கள்ளச்சாராயத்தால் இந்த உயிர் போகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது மிகவும் கண்டனத்திற்குரியது. மெத்தனால் கலந்த கலாச்சாரம் குடித்ததால் தான் இவரின் உயிர் போனது என்பது பின்னர் நடைபெற்ற உடற்கூறாய்வு விசாரணையில் தெரியவந்தது.