தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி யாருக்கு.. ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kallakurichi constituency: கள்ளக்குறிச்சி தொகுதியில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக, நாதக தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாகை சூடப்போவது யார்? கள நிலவரம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 10:44 AM IST

கள்ளக்குறிச்சி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில் கடும் போட்டி நிலவும் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாகை சூட போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி தொகுதி:தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 14-வது தொகுதி தான் கள்ளக்குறிச்சி தொகுதியாகும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பால் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. பொதுத்தொகுதியான கள்ளக்குறிச்சியில் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) என 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. 7 இலட்சத்து 68 ஆயிரத்து 729 ஆண்களும், 7 இலட்சத்து 89 ஆயிரத்து 794 பெண்களும், 226 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15 இலட்சத்து 58 ஆயிரத்து 749 வாக்காளர்கள் நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு செலுத்த உள்ளனர். இத்தொகுதியில், நான்கு முறை திமுகவும், ஒரு முறை அதிமுகவும் வெற்றி வாகை சூடி உள்ளன.

வெற்றி யாருக்கு?: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அதிமுக சார்பில் குமரகுரு, திமுக சார்பில் மலையரசன், பாமக சார்பில் தேவதாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நால்வருக்கான ரேஸில் அதிமுக வேட்பாளர் குமரகுரு சற்று முன்னனியில் இருப்பதாக செல்லப்படுகிறது. திமுகவின் மலையரசன் அதிமுகவின் குமரகுரு இடையே சுமார் 2 விழுக்காடு வாக்குகள் இடைவெளி இருக்கும் என சொல்லப்படுகிறது.

யார் இந்த குமரகுரு: 1961ம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர் அஞ்சல் ஏ.சாத்தனூர் ஊராட்சியில் எடைக்கல் கிராமத்தில் இராமசாமி என்பவருக்கு மகனாக பிறந்தவர் தான் குமரகுரு. உளுந்தூர்பேட்டை நகர் முழுவதும் உள்ள இளைஞர்களால் கவரப்படும் ஒரு தலைவராக வலம் வரும் குமரகுரு, கட்சிகள் அல்லாது உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையை நன்கு பரிச்சயமானவர்.

2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர். ஆனால் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில், மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (2.17) திமுக வேட்பாளர் ஏ.ஜே மணிகண்டனிடம் தோல்வியுற்றார். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அங்கமாக இருந்த பொழுது அஇஅதிமுக மாவட்ட செயலாளராக இருந்து வந்த சி.வி.சண்முகத்தினுடைய தீவிர விசுவாசியாக குமரகுரு செயல்பட்டு வந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னர், கள்ளக்குறிச்சி அஇஅதிமுக மாவட்ட செயலாளராக குமரகுரு நியமிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை பெற்றவராக வலம் வரும் குமரகுரு, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத்தில் அஇஅதிமுக வேட்பாளராக நின்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை தோற்கடித்து தமிழகம் முழுவதும் பேசப்படும் வேட்பாளராக அறிமுகமானார். 2016 முதல் 2021 வரையிலான தமிழ்நாடு சட்டப் பேரவையில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 2019 முதல் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக உளுந்தூர்பேட்டை நகர் அருகே ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி கோயில் போன்று சிறிய அளவிலான கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதற்காக இருக்கும் தனது நான்கு ஏக்கர் சொந்த நிலத்தையும், மூன்று கோடி ரூபாய் பணத்தையும் இலவசமாக கொடுத்தார். தற்போதுள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் சிறியதாக உள்ளதால், வெளிப்பகுதியில் ஒரு பெரிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

இவருடைய அறிவுறுத்தல் பெயரிலேயே விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதாகவும், இவரே கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வர காரணமாக இருந்தவர் என்றும், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய கால்நடை பூங்காவை கள்ளக்குறிச்சி அருகே கொண்டு வந்தவர் என்றும் மக்களிடையே நல்ல பெயர் உண்டு.

என்னதான் நிறைகள் இருந்தாலும், கடந்த ஆண்டு அக்டோபர் 19-ஆம் கள்ளக்குறிச்சி நகரில் மந்தவெளி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் பற்றி தகாத வார்த்தைகளால் பொது மேடையில் பேசி அவதூறு வழக்குகளை எதிர் கொண்டார். இவ்வழக்கில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி எங்கு எந்த இடத்தில் அவதூறாக பேசினாரோ அதே இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, மன்னிப்பும் கேட்டார்.

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் திமுக-வின் முக்கிய புள்ளிகளிடம் மன்னிப்பு கூறினார் என்கிற மறைமுக கவலையும் அதிமுக உறுப்பினர்களிடையே உள்ளது. மேலும், கடந்த மாதம் 26-ஆம் தேதி, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக இக்கூட்டத்தில் பேசிய குமரகுரு, “யாரெல்லாம் நமக்கு ஓட்டு போடுவாங்களோ, அவங்களை பார்த்து மட்டும் பணம் கொடுக்கணும். மற்றவர்களையெல்லாம் விட்டுவிடுங்க. யாரையும் கேட்க வேணாம். எதுக்கு வேஸ்ட்! வராதவங்கள விட்டு விடு. நாலுக்கு பதிலா எட்டா கொடு. இல்லையா பன்னிரெண்டா கொடு. முடிஞ்சி போச்சு. ஈஸியா ஜெயிச்சிடலாம்” என பேசினார்.

இந்த பேச்சானது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவரது பேச்சு அமைந்திருந்ததாக கூறி, அவர் பேசிய வீடியோக்களை ஆதாரமாக வைத்து ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் அலுவலர்கள் ஆத்தூர் ஜே.எம்.1. உத்தரவுப்படி, வேட்பாளர் குமரகுரு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்சி தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போவது யார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details