சேலம்: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு பிரகதீஸ்வரி (21), அருணா (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரகதீஸ்வரிக்கு நிச்சயதார்த்தம் செய்ய, மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு, அய்யப்பன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், ஜலகண்டாபுரம் அருகே சின்ன பணிக்கானுர் பகுதியில் கார் சென்றபோது, காரின் பின்னால் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், இவர்களை வழிமறித்து, பிரகதீஸ்வரியை மற்றொரு காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை அய்யப்பன், ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இளம் பெண்ணை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ஹரிஅரவிந்த் என்ற இளைஞரை பிரகதீஸ்வரி இரண்டு ஆண்டாக காதலித்து வந்துள்ளது தெரிய வந்தது.