தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், "பத்திரிக்கையில் வரும் கருத்துக் கணிப்பை மீறி அதிமுக வெற்றி பெறும். அதிமுக யாருக்கும் அடிமை இல்லை, மக்களுக்குத்தான் அடிமையாக இருக்கும் இயக்கம் அதிமுக என்பதை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக முத்திரை பதிக்கப் போகிறோம்.
நான்கரை ஆண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி தந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன் காரணமாகவே திமுக ஆட்சிக்கு வந்தபின்னும், தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பற்றிப் பேசுகிறார்கள். 2021 தேர்தல் களத்தில் அதிமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது.
திமுக, அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியால் தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தற்போது, அந்த தேர்தல் வாக்குறுதிகளே அவர்களை இந்த தேர்தலில் திருப்பி தாக்கும் ஏவுகணையாக மாறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, 3 ஆண்டுகள் முடிந்தபின்னும், நீட் தேர்வை ஒழிப்போம் என்று கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.