சென்னை:தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் வசிப்பவர்கள், தங்கி பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை வேளையில் சென்னையில் வசிப்பவர்கள் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நபர்கள் பிடித்த இடங்களைக் காணுவதற்காக பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்குப் படையெடுத்தனர்.
குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை, கிழக்கு கடற்கரைச் சாலைகள், சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்குப் பொதுமக்கள் நேற்று குடும்பம் குடும்பமாகச் சென்று சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை இல்லாததால் சொந்த ஊர்களுக்குச் சென்ற சிலர் நேற்று இரவு முதல் சென்னை திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், ஜிஎஸ்டி சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசைகட்டி உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க போக்குவரத்து காவல்துறையினர் கூடுதல் பணியில் அமர்த்தப்பட்டு, போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.