சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா இன்று பணிஓய்வு பெற்றார். இதனை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மே மாதத்தில் பிறந்து மே மாதம் ஓய்வு பெறுகிறார். ராஜராஜ சோழன் போல வந்து தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ராஜராஜ சோழன் ராஜ்ஜியங்களை வெற்றி கண்டார். ஆனால், தலைமை நீதிபதி நம் மனதை வெற்றி கொண்டுள்ளார்” என பேசினார்.
மேலும், அறிவு, பொறுமை, நேர்மை தவிர, தலைமை நீதிபதியின் சக்தி, ஆர்வம், நீண்ட நேரம் வழக்குகளை விசாரிப்பது கண்டு பிரமித்திருப்பதாகக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், சென்னை வரும் முன், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, கடந்த 14 ஆண்டுகள் 2 மாதங்களில் ஏழு நாட்கள் மட்டும் தான் விடுப்பு எடுத்திருக்கிறார் எனவும், சென்னை வரும் முன் 85,090 வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 11 மாத காலங்களில் சென்னையில் 13,015 வழக்குகளிலும், மதுரையில் 1,574 வழக்குகளிலும் தீர்ப்பளித்துள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், மொத்தமாக 99 ஆயிரத்து 949 வழக்குகளில் தலைமை நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.
இன்னும் 51 வழக்குகளில் தீர்ப்பளித்திருந்தால், ஒரு லட்சம் வழக்குகளில் தீர்ப்பளித்தவர் என்ற பெருமையை பெற்றிருக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், “உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். இதற்கு மேலும் நடக்காது” எனக் கூற முடியாது என பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தகுதிச்சுற்றுக்கு வந்ததை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து, மாலை வணக்கம் என தமிழில் கூறி, ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, மருத்துவம் இடம் கிடைக்காததால் வழக்கறிஞரானதாகவும், சட்டக் கல்லூரியில் வகுப்புகளை நடத்தியுள்ளதாகவும், தனது மாணவர்களில் இருவர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.