சென்னை:ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் உள்ள நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜகோபுரத்தை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் ராஜகோபுரத்தை இடிக்க தடை விதிக்க கோரியும் ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் பாதையை வேறு இடத்துக்கு மாற்றினாலும், துர்க்கை அம்மன் கோயில் கோபுரத்தையும், ரத்தின விநாயகர் கோயில் கோபுரத்தையும் அகற்ற வேண்டிய நிலை உள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் துர்க்கை அம்மன் கோயிலின் பிரதான கோபுரத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மிகவும் பாதுகாப்பான இடத்தில் மாற்ற முடியும். பக்தர்கள் விரும்பினால் அதே இடத்தில் விநாயகர் கோயில் கட்டித் தரப்படும் என்றார். இதைத் தொடர்ந்து, அந்த கோயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
அப்போது மனுதாரர் சார்பில், இந்த கோயில் பழமையான கோயில். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோயிலில் பக்தர்கள் சாமி கும்பிட்டு வருகிறார்கள் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல், மூத்த வழக்கறிஞர்கள் ரவி, வி.ராகவாச்சாரி ஆகியோருடன் நீதிபதி குமரேஷ்பாபு கோயிலை பார்வையிடவுள்ளதாகவும், அதன் பிறகு முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்தனர்.