சென்னை:அதிமுக பொதுக்குழு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நிதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், முதன்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:மகன் அல்லது மகள் என வாரிசு இருந்தாலும் ஆதரவற்ற விதவைக்கான சான்று வழங்கப்படும்...-சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை!
இதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. வேண்டுமானால் மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறவும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவம்பர் 07) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2022ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து, பொதுக்குழு தீர்மானங்களை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார்.
மேலும், இந்த வழக்குகளை வேறு நீதிபதி முன்பு பட்டியலிடும் வகையில், தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்