சென்னை:சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அவரது வீட்டின் வெளியே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி என்கவுண்டர்: இதனிடையே, போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம் (33) என்ற முக்கிய குற்றவாளியை இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை மணலியில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
ரெட்டேரி ஆட்டுச்சந்தை அருகே இயற்கை உபாதைக் கழிக்க சென்ற திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பிச் சென்று புழல் வெஜிடேரியன் விலேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்தார். அப்போது, காவல்துறையினர் அங்கு சென்றுப் பிடிக்க முற்பட்டபோது, காவல்துறையினரை நோக்கி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்தனர்.
மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு: பின்னர், திருவேங்கடத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, புழல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மாஜிஸ்ட்ரேட் தீபா நேற்றிரவு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.