தருமபுரி: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகியது. இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97.45 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது.
இந்நிலையில், தருமபுரி பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி படித்த பாலக்கோடு நீதிமன்ற நீதிபதியின் மகள் ஸ்ருதி என்ற மாணவி, பொதுத்தேர்வில் 600க்கு 590 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவர், தமிழில்- 98, ஆங்கிலத்தில் - 96, இயற்பியல் -100, வேதியியல் -100, தாவரவியல் -98 மற்றும் கணிதவியலில் 98 என மொத்தம் 600க்கு 590 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இதனால், முதலிடம் பெற்ற மாணவிக்குப் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.