சென்னை:2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி, தங்கள் கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து வருகின்றன. அந்த வகையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜகவின் மாநிலப் பிரிவு தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சந்திப்பதற்காகவும், சென்னையில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் இன்று (பிப்.11) சென்னை வருகிறார்.
அதன்படி, இன்று சென்னை வரும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் கலந்து கொள்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம், கடந்த 2023ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், திமுக ஆட்சியின் மீது குற்றச் சாட்டுகளை முன்வைத்தும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலையின் இந்த நடைபயணம் மூலம் தமிழகத்தில் பாஜக-விற்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்ற சமீபத்திய கருத்து கணிப்பைத் தொடர்ந்து, தற்போது பாஜகவினர் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.