கரூர்: கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (ஏப்.7) மதியம் 1.30 மணியளவில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலையப்பசாமி, பாமக மாவட்டச் செயலாளர் புகலூர் சுரேஷ், அமமுக கரூர் மாவட்டச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், நான் ஆங்கிலத்தில் பேசட்டுமா அல்லது இந்தியில் பேசட்டுமா என்று கேட்டுவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது, “கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் மிகவும் திறமையானவர். அவர் வெற்றி பெறுவதற்காக நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பிரதமர் மோடி சென்றபோது, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், மொழியையும், தமிழ் மீதுள்ள பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்கும், வாரணாசி நகருக்கும் உறவை ஏற்படுத்தும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம் என்ற அமைப்பைக் கொண்டு ஒற்றுமையை வலிமைப்படுத்தியுள்ளோம்.
கரோனா போன்ற காலகட்டத்தில், உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இந்தியாவை ஆண்டு வரும் பிரதமர், இந்தியாவை வலிமையான பொருளாதாரமிக்க நாடாக மாற்றி இருக்கிறார். இங்கு பொருளாதார பணவீக்கம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால், உலகில் மிகப்பெரிய பொருளாதாரமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவை மூன்றாவது இடத்தில் நிச்சயம் அமர வைப்போம். இந்தியாவின் ஏற்றுமதி ரூ.70,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
இன்று சொந்த நாட்டில் நாம் அனைவரும் பயன்படுத்தும் நவீன செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது அனைத்தும் சீன நாட்டு உற்பத்தி செல்போன்கள் மட்டுமே. மேட் இன் இந்தியா (Made in India) என்பது கார் உற்பத்தி, மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி, செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி என அனைத்திலும் இந்திய நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்தில் சொந்த நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேறி உள்ளது. மீண்டும் பாஜக இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தால், நாம் இரண்டாவது இடத்தையும் பிடிப்போம்.
கிசான் மந்தன் யோஜனா: இந்தியப் பிரதமரின் 'கிசான் மந்தன் யோஜனா' திட்டத்தில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா: சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்கள், கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டு பயன்கள் வழங்கக்கூடிய 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' (Ayushman Bharat Yojana) திட்டத்தை, வங்கிகள் மூலம் சுமார் 55 கோடி மக்களுக்கு, அதாவது இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதத மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம்: இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் துவக்கப்பட்ட 'ஜல்ஜீவன் திட்டம்' மூலம் தமிழ்நாட்டில் மட்டும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 2 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கழிப்பிடங்கள்: இந்தியா முழுவதும் தனிநபர் கழிப்பறைகள் 4.12 கோடி பேருக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 60 லட்சம் மகளிர் கண்ணியத்துடன் வாழ்வதற்கு, தனிநபர் கழிப்பிடங்கள் பிரதமரின் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.