ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் வட மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியான இவர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியில் சென்று நேற்று மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள் சிலர், மறைந்த தனது மனைவியின் படத்துக்கு அணிவித்திருந்த நான்கரை சவரன் செயின், முக்கால் சவரன் தாலி ஆகியவற்றை திருடப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
மேலும் அவரது வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். வடமாம்பாக்கம் காமராஜர் நகரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராம்கி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஜிமிக்கி, மாட்டல் என 5 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு வீட்டின் பூட்டை உடைத்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி கொலுசு, ஒரு கிராம் மோதிரம் திருடியுள்ளனர். வட மாம்பாக்கம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து மொத்தம் 15 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.