தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய ஜே.சி.டி பிரபாகரன்.. அதிமுகவை ஒருங்கிணைக்க குழு அமைப்பு! - JCD Prabhakar - JCD PRABHAKAR

JCD Prabhakar: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜே.சி.டி பிரபாகரன் அறிவித்துள்ளார்.

ஜே.சி.டி பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
ஜே.சி.டி பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு (Credit -ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 9:11 PM IST

சென்னை:அதிமுகவை ஒருங்கிணைக்க ஜே.சி.டி பிரபாகரன், புகழேந்தி, கே.சி.பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 8) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.

ஜே.சி.டி பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு (Credit -ETVBharat TamilNadu)

அப்போது பேசிய ஜே.சி.டி பிரபாகரன், “பிரிந்து கிடைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தேன். பதிவாக வெளியிடுவது மட்டும் போதாது என்பதால், தற்போது இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். யார் தலைமை என்பதை குறிப்பிட்டுச் சொல்வது எங்கள் வேலை இல்லை.

அனைவரிடம் கலந்து பேசி அதிமுகவை ஒன்றிணைப்பதுதான் எங்கள் வேலை. சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் என அனைவரும் அமர்ந்து பேசி ஒருமித்த கருத்து எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார். அதனைத் தொடர்ந்து புகழேந்தி பேசுகையில், “கே.சி.பழனிசாமி எனக்கு நேர் எதிரானவர். ஆனால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜே.சி.டி சொன்னதால் இன்று ஒன்றாக வந்துள்ளோம்.

மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிமுக 7 இடத்தில் டெபாசிட் வாங்கவில்லை. கடந்த முறை ஒரு இடம். தற்போது அதுவும் இல்லை. பல இடங்களில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவி என்று சொன்ன அந்த கட்சி தோற்றுவிட்டது. எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர்களைப் பற்றி தவறாக பேசும் கட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓபிஎஸ்-க்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் ஒரு திசையை நோக்கி பயணிக்கிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். யாரோ அதிமுகவை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள். அதிமுகவை ஒழிப்போம் என்று சொன்னால் அந்த தேசியக் கட்சியை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

40 இடங்களையும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு பாராட்டுகள். முதலமைச்சருக்கும் வாழ்த்துகள். பாஜக - திமுக என்ற சூழ்நிலைக்கு தற்போது வந்துள்ளது. இதை என்னால் பார்க்க முடியவில்லை. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நான்கு திசையில் இருந்தும் தொண்டர்கள் ஒலிக்கிறார்கள். உங்களை இணைக்க முடியாது என ஒருவர் சொல்கிறார்.

நான் வேண்டி கேட்டுக் கொள்கிறேன், அனைவரும் கீழே இறங்கி வாருங்கள். கீழே இருப்பவர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வரலாம் என எடப்பாடி சொல்கிறார். யார் வேண்டுமானாலும் தலைமைக்கு கொண்டு வரட்டும். நாங்கள் தற்போது வேகத்தைக் காட்டவில்லை, விவேகத்தை காட்டுகிறோம்.

விஜயகாந்த் அனுதாப அலை நன்றாக பேசியது. விஜயபிரபாகரன் ஜெயித்திருக்கலாம் என்று நினைத்தேன். தருமபுரியில் செளமியா அன்புமணியும் முன்னிலையில் இருந்தார். இது போல அதிமுகவும் முன்னிலையில் வரவில்லையே என கண் கலங்கியது. அதிமுகவை ஒருங்கிணைக்கும் எங்கள் முயற்சிக்கு எடப்பாடி இறங்கி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

பின்னர், கே.சி.பழனிசாமி பேசுகையில், “நாங்கள் எந்த அணியையும் சாராமல் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் முயற்சி செய்ய இருக்கிறோம். அதிமுகவுக்குள்ளேயே இருந்துகொண்டு தேசியக் கட்சியை ஆதரிக்கக் கூடாது. எந்த குடும்பத்திற்கும் அதிமுக சென்று விடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்னொரு தோல்வியைச் சந்தித்தால் தொண்டர்கள் தலைவர்களை மன்னிக்க மாட்டார்கள். அதற்கு எல்லாரையும் ஒன்றிணைப்போம். சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருடன் பேசி ஒன்றிணைப்போம். இந்த விஷயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் கடிதம், தொலைபேசி என எதன் மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம்.

தேவைப்பட்டால் மாவட்டம்தோறும் சென்று தொண்டர்களை சந்தித்து கருத்துக்காளை பெறுவோம். இன்னும் 18 மாதம்தான் இருக்கிறது. அதற்குள் இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். உள்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து பயணிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: “நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும்” - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! - ANBIL MAHESH POYYAMOZHI

ABOUT THE AUTHOR

...view details