ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடு கூடாது - காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - POLICE
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Published : Jan 10, 2025, 3:55 PM IST
சென்னை:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த போது 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி அனுமதி மறுத்த காவல்துறை, ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
போராட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போராட்டங்களுக்கு 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை மாநகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும் டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் காவல்துறையினர் சமமாக பாவிக்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
ஒரு தரப்புக்கு ஒரு நாளில் அனுமதி அளிப்பதும், மற்றவர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் இருப்பதும் கூடாது என்றும், போராட்டங்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதி, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு காவல்துறையினால் தான் பதில் சொல்ல வேண்டி வரும். அவர்களை தான் குறை கூறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
பின்னர், பாமக மனுவுக்கு ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அப்போது இது தொடர்பாக விரிவான உத்தரவுகள் பிறப்பிப்பதாக தெரிவித்தார்.