திருவாரூர்: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில், ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன், “தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களது வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஜாக்டோ ஜியோ. இந்த பேரமைப்பின் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்தி வருகிறோம்.
இந்த ஆயத்த மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்பது, திமுக அரசு ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் ஆகியும், தேர்தல் வாக்குறுதியில் அரசு ஆசியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த ஒரு அறிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், 4வது பட்ஜெட், வருகிற பிப்.19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் தேர்தல் அறிக்கையை பல மாநிலங்கள் அமலாக்கிவிட்டன. நேற்று (பிப்.09) சிக்கிம் மாநிலம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கிவிட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு, தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி அமைச்சர் மாறி உள்ளார். அவர் பழனிவேல் தியாகராஜனைப் போல் இல்லாமல், எங்களுக்குத் தேவையான ஓய்வூதியத் திட்டம், சரண்டர் மற்றும் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.