சென்னை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்காக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சை வேட்பாளராக மார்ச் 25ஆம் தேதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஓபிஎஸ்-க்கு எதிராக ஓ.பன்னீர் செல்வங்கள்: கடந்த மார்ச் 25ஆம் தேதி உசிலம்பட்டி அடுத்த மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, மார்ச் 26 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
பின்னர், மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த வாகைகுளத்தைச் சேர்ந்த ஒச்ச தேவரின் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் ஆகியோரும் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளான மார்ச் 27ஆம் தேதி, கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பன்னீர்செல்வம் எனும் பெயரில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்-க்கு சின்னம் ஒதுக்கீடு: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை ஆகிய சின்னங்களில் வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். இதில், வாளி சின்னம் தங்களுக்கு ஒதுக்கும் படி ஓ.பி.எஸ் தரப்பில் முன்னுரிமை கோரப்பட்டது. ஆனால், மற்றவர்களும் வாளி சின்னம் கேட்கப்பட்டதால், வாளி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஓ.பி.எஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற 4 ஓ.பி.எஸ்-க்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் என்ன?
- மதுரை வாகைக்குளத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணாடி டம்பர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் கங்கைகொண்டானைச் சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கு பட்டாணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு - VCK Candidates Got Pot Symbol