திருச்சி:திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக கூட்டணி சார்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக, திமுக தலைமைக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் தொகுதியில் தற்போது எம்.பியாக இருந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் நவாஸ் கனியை, மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, இந்திய நாட்டு மக்களை மத அடிப்படையில் பிரித்து, சாதி அடிப்படையில் வேறுபடுத்தி, 75 ஆண்டுகளாக பின்பற்றிய இந்திய நாட்டின் கலாச்சாரம், அரசியல் சாசன நடைமுறைகளை சிதைத்து, குலைத்து அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கொங்கு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.