திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வாக்களார்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே, கடந்த வாரம் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து இப்பணத்தைக் கொண்டு சென்ற 3 பேரைக் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அப்பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான புளு டைமண்ட் ஹோட்டலுக்குத் தொடர்புடையது என்றும், அதை தேர்தல் பணப்பட்டுவாடாவுக்காகக் கொண்டு சென்றது பாஜகவினர் என்றும் தகவல்கள் வெளியானது. மேலும், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்த போலீசார், வரும் 22ஆம் தேதி நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரும், நெல்லை மாவட்ட கல்குவாரி சங்கத் தலைவருமான ரிச்சர்ட் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். அதாவது, நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் கனிமவள வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் 67 லாரிகளின் நடை சீட்டுகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததாகவும், அந்த சீட்டுகளைக் கைப்பற்றியபோது, அது போலி சீட்டு என்றும் கூறப்படுகிறது.