தமிழ்நாடு

tamil nadu

வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா? - 44 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை! - IT Raid IN Tamilnadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 1:10 PM IST

IT Raid IN Tamilnadu: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தின் சில இடங்களில் பணப் பட்டுவாடா புகார் எழுந்த நிலையில், தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கி தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு,சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 8 அரசு ஒப்பந்ததாரர் வீடுகளிலும், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகம் மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணபட்டுவாடா மற்றும் பணம் பதுக்கல் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குடிநீர் வழங்கல் வாரியத்தின் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி ஒப்பந்ததாரர்களாக இருப்பவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், அரசியல் பிரமுகர்கள் வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய முயற்சிக்கிறார்களா? என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகர் பகுதியில் ஒப்பந்ததாரர் ஒருவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று மதியத்தில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நேற்று திமுக மாவட்டச் செயலாளர்.. இன்று அரசு ஒப்பந்ததாரர்; வருமான வரித்துறை நெல்லையை வட்டமிடுவதன் பின்னணி என்ன? - Tirunelveli IT Raid

ABOUT THE AUTHOR

...view details