கோயம்புத்தூர்:மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அட்டுக்கல், குப்பேபாளையம், மருதமலை வனப்பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக அதிகளவிலான யானைகள் இந்த பகுதியில் உலா வருவது வழக்கம்.
இந்த யானைகள், மாலை மற்றும் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வருகிறது. மேலும், விளை நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், விவசாய நிலங்களில் புகும் யானைகள் அதிகளவில் விவசாய பயிர்களையும், வீடுகளில் உள்ள உணவு பொருட்களை எடுக்க வீடுகளை இடித்து சேதப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
எனவே இதனை தடுக்க, தோட்டத்தை சுற்றி சோலார் மின் வேலிகளை அமைத்து காவல் காத்து வருகின்றனர். மேலும், ஆங்காங்கே சட்ட விரோத மின் வேலிகளும் அமைக்கப்படுவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பார்த்து பார்த்து வரைந்த தவெக மாநாட்டின் விளம்பரங்கள் அழிப்பு! ஈரோடு நிர்வாகிகள் ஷாக்..!
இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள சுற்றுச் சுவரில் இரும்பு கம்பி மற்றும் ரம்பம் போன்ற கூர்மையான இரும்பு தகடுகளையும் பதித்துள்ளனர். இதனால் யானைகளுக்கு உடலில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அட்டுக்கல் மற்றும் குப்பேபாளையம் கிராமம் வனத்தை ஒட்டி உள்ளதால் எப்போது யானை நடமாட்டம் காணப்படும். வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வருவதால் ஒரு சில தோட்டங்கள் மற்றும் வீடுகளில் யானைகள் நுழையாமல் இருக்க, கூர்மையான இரும்பு கம்பி மற்றும் இரும்பு தகடால் ரம்பம் போன்றும் செய்து சுற்றுச்சுவரில் பதித்து வைத்துள்ளனர். இதனால், சுற்றுச் சுவரை ஒட்டி செல்லும் யானைகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை உடனடியாக அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இது போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயமடையும் யானைகள் ஆவேசமாக சுற்றி வருவதால் யானை மனித மோதல் அதிகமாக அப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டபோது, சுற்றுச் சுவரில் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கம்பிகள் பதிக்கப்பட்டுள்ளது குறித்து கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இரும்பு கம்பிகளை அகற்ற வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்