மதுரை:சிவகங்கை மாவட்டம், வேப்பங்குளம் கிராமத்தில் விவசாயம், நீர்மேலாண்மை, தகவல் தொழில் நுட்பம் என அனைத்தும் ஒருங்கிணைத்து வேளாண்மையை வெற்றிகரமாக்கியுள்ள நிலையில், இதனை இந்தியா முழுவதும் அனைத்துக் கிராமங்களுக்கும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர்கள் கொண்டு செல்ல வேண்டும் என தகவல் தொழில்நுட்ப வல்லுநர் திருச்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்செல்வம் கூறுகையில், “தமிழகத்தைச் சேர்ந்த ஐடி வல்லுநர்கள் குழு கடந்த 23 ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை கிராம அளவில் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக, விவசாயத்தை திட்டமிடுவதிலிருந்து விற்பனை செய்வது வரை உள்ள தேவைகளை விவசாயிகள் அவரவர் கிராமத்திலேயே பூர்த்தி செய்து கொள்வதற்கு முழு தீர்வொன்றை நாங்கள் உருவாக்கினோம்.
அதுமட்டுமன்றி, விலை ஏற்ற இறக்கங்கள், உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் குறித்த முழுமையான தரவுகள் விவசாயிகளை மிகவும் பாதிப்படையச் செய்கிறது. அந்த அடிப்படையை நிறைவேற்றும் விதமாக ஒரு கிராமத்தில் எந்த பயிர், எந்த காலகட்டத்தில், எத்தனை ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது என்பதை தொடர்ந்து பதிவு செய்வதால் இந்தியா முழுவதும் பயன்படும். இதனால் அரசோ அல்லது விவசாயத்துறையோ தேவைக்கேற்ற வகையில் விவசாயிகள் பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.
இந்தத் திட்டம் ஆந்திர மாநிலம் புலிவேந்துலா எனும் ஒன்றியம், கடப்பா மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செய்யும் வாய்ப்பு கடந்த 2004-ஆம் ஆண்டு கிடைத்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு வரை அந்தத் திட்டத்தை அங்கு வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதனை விரிவாக்கம் செய்தபோது, மத்திய-மாநில உயர்மட்டக்குழு, இத்திட்டம் இந்திய வேளாண்மையில் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என ஒப்புதல் அளித்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக 2010-ஆம் ஆண்டு இத்திட்டம் ஆந்திராவில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்காக நாங்கள் மனம் தளராமல், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டோம். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திலுள்ள வேப்பங்குளம் கிராமத்தின் வருவாயை இரட்டிப்பாக்க முயன்றோம். கடந்த 2018-ஆம் ஆண்டு அந்தக் கிராம மக்களின் நிதி பங்களிப்புடனே அங்குள்ள நீர்நிலைகளை சரி செய்தோம். இதன் விளைவு இன்று விவசாயத்தில் அந்தக் கிராமம் தன்னை முழுவதுமாக மீட்டெடுத்துள்ளது. இதில் நீர் மேலாண்மை மட்டுமன்றி, விவசாய மேலாண்மை, பயிர் மேலாண்மை ஆகியவற்றோடு சந்தைப்படுத்துதலிலும் சிறந்து விளங்குகிறது.