சென்னை:கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் நிலச்சரிவு அபாயம் குறித்த இஸ்ரோவின் NRSC (தேசிய தொலைநிலை உணர்தல் மையம்) அமைப்பின் தரவுகள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலைநிலை உணர்தல் மையம் (National Remote Sensing Centre), இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலச்சரிவு அபாயம் குறித்த தகவல்களை வெளியிட்ட NRSC அமைப்பு, இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
13வது இடத்தில் வயநாடு: குறிப்பாக, கேரள மாநிலத்தின் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதை செயற்கைக்கோள் படத்துடன் விளக்கிய NRSC ஆய்வு மையம், நிலச்சரிவு அபாய பட்டியலில் இந்தியாவில் 13வது இடத்தில் வயநாடு இருப்பதாக பதிவு செய்துள்ளது.
மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கனமழை, நிலநடுக்கம் போன்ற இயற்கை காரணங்களும், சாலைகள், கட்டுமானம், சுரங்கம் போன்ற மானுடவியல் நடவடிக்கைகளும் முக்கியக் காரணியாக உள்ளது. உலகில் அதிக உயிர்களைப் பழிவாங்கும் இயற்கைப் பேரிடரில் நிலச்சரிவு 3வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் நிலச்சரிவு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளாக கொலம்பியா, தஜிகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகியவை இருக்கும் நிலையில், இந்தியாவில் பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களிலேயே அதிக நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.
இந்தியாவில் நிலச்சரிவுகள் 85.3 சதவீதம் இமயமலையிலும் (66.5 சதவீதம் இமயமலையின் வட மேற்குப் பகுதியிலும், வடகிழக்கு இமயமலையில் 18.8 சதவீதம்), மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 14.7 சதவீதமும் ஏற்படும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் 690 இடங்கள், கேரளத்தில் 6 ஆயிரத்து 39 இடங்கள், கர்நாடகத்தில் 1,094 இடங்கள் நிலச்சரிவு ஆபத்துமிக்க இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.