தூத்துக்குடி:நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்களும், மாவட்ட செயலாளர்களும் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியில் நடைபெற உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காளியம்மாள் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் என அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
வைரலாகும் அழைப்பிதழ் (ETV Bharat Tamil Nadu) மணப்பாட்டில் உள்ள முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிரேன்ஸிட்டா தனது மகளின் முதல் திருவிருந்து நிகழ்ச்சிக்காக அழைப்பிதழ் அச்சிட்டுள்ளார். அதில், உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பங்கு தந்தைகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில், காளியம்மாள் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்த பெயருக்கு கீழ் சமூக செயற்பாட்டாளர் என அச்சிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சொன்னதென்ன?
இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, '' தங்களுக்கு நாம் தமிழர் கட்சியில் அவ்வளவு பெரிய அளவில் ஈடுபாடு கிடையாது. எனவே காளியம்மாள் பெயருக்கு கீழ் சமூக செயல்பாட்டாளர் என்று அச்சிட்டு உள்ளோம். மீனவ குடும்பத்தில் பிறந்த பெண்மணி தற்போது மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்கான மக்கள் பணி ஆற்றி வருகிறார்.
அவர் தென்பகுதி மக்களுக்கும் தேவை என்பதை உணர்த்தும் விதமாக எங்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அவரது பெயரை சமூக செயற்பாட்டாளர் என்று குறிப்பிட்டோமே தவிர வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. இது குறித்த அச்சிடப்பட்ட அழைப்பிதழ் காளியம்மாளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரும் நிகழ்ச்சிக்கு நிச்சயம் வருகை தருவதாக கூறியுள்ளார்'' என்று அவர் தெரிவித்தார்.
சீமான் ரியாக்ஷன்
இதற்கிடையே இன்று (பிப்.22) மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், '' கட்சிக்கு நிறைய பேர் வருவார்கள் போவார்கள், காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இந்த கட்சியில் இருப்பதா? அல்லது வேறு எந்த கட்சியில் போய் சேர்வதா? என முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து கொண்டு வந்தது நான் தான். பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று இருக்கும் அதுபோல எங்க கட்சிக்கு களையுதிர் காலம்'' என்றார்.