சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு குணா என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா ஆகிய இரண்டு பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவரோடு இணைந்து போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக NIA அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விசாரணை கைதியாக புஷ்பராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி புழல் சிறையில் கைதிகளை வரிசைப்படுத்தி அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கும் பணியில் அருண்ராஜ் என்ற சிறை காவலர் ஈடுபட்டபோது, கைதி புஷ்பராஜா சிறைக் காவலர் அருண்ராஜை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றதாக கூறி புழல் காவல் ஆய்வாளர் ராஜசிங், கைதி புஷ்பராஜா மீது வழக்குப் திவு செய்து விசாரித்து வருவதாக தெரிகிறது.
இந்த சூழலில், புழல் மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக உள்ள புஷ்பராஜாவை தனிமை சிறைப்படுத்தி மனித உரிமை மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சிறை போலீசார் புஷ்பராஜாவை தாக்கியதை மறைக்க அவர் சிறை காவலரை தாக்கியதாக பொய் வழக்குப்பதிவு செய்து சித்திரவதை செய்வதாகவும் புஷ்பராஜாவின் அத்தையான விஜயலட்சுமி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், புஷ்பராஜா மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவரை சித்திரவதை செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜய லட்சுமி எழும்பூரில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தத் துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.