சென்னை:ஐபிஎல் 2024 போட்டி, கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டிற்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே கடந்த 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மாலை மாலை 7.30 மணியளவில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி, 'இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இது குறித்து வெளியிட்ட தகவலில், 'சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (26.3.2024) அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 1:00 மணி வரை (27.03.2024 – 1.00 AM) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும் என்பதாலும் மேலும், போட்டிக்குப் பிறகு, அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.