நீலகிரி:நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முள்ளிக்கரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் 'அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம்' செயல்பட்டு வருகிறது. உதகை நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கிவரும் இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் 49 ஆயிரத்து 500 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
புகார்:இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வீடுகளிலிருந்து வெளியேறும் முதியவர்கள், சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் என சுமார் 80 முதல் 95 நபர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள் மரணம் அடையும் சம்பவம் அதிகரித்து வந்ததாகவும், இவ்வாறு மரணமடையும் முதியவர்களின் உடல்கள் அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல், ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளே அவர்களின் உடல்களை பொது மயானத்தில் அடக்கம் செய்தும், எரித்தும் வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஆதரவற்றோர் இல்லத்தில் விசாரணை (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், இங்கு தங்கி உள்ள முதியவர்களின் சொத்துக்கள், அவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள சேமிப்பு பணங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் உள்ளிட்டவை கையாடல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, இங்குள்ள முதியவர்களை அடித்து துன்புறுத்துவதும், அவர்கள் வெளியேற்றும் உடல் உபாதைகளை அவர்களே சுத்தம் செய்வது, போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் உடல் நலக்குறைவு மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் தரையில் உறங்குவது போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
3 பேர் கொண்ட குழு:இது குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த செல்வா என்பவர், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளித்து இருந்தார். இதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ‘இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிப்பார்கள்’ என தெரிவித்தார்.
விசாரணை:இதனையடுத்து கோட்டாட்சியர் மகாராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி தலைமையிலான குழுவினர், அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோட்டாட்சியர் மகாராஜா கூறியதாவது, “உதகை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.
இதன் அடிப்படையில் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். அதன் பேரில், இன்று இந்த இல்லத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இங்கு தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், குறிப்பிட்ட சில புகார்கள் குறித்து நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தான அறிக்கை விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிட இட விவகாரம்; 2016-ல் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை!