சென்னை: தனியார் பள்ளிகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தியும், கட்டமைப்புடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தப் பின்னர் நடைபெற்று வந்தன. இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மார்ச் 1ஆம் தேதி முதல் சேர்க்கை துவக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மிக முக்கியமானது.
புத்தகங்கள் மற்றும் கரும்பலகைகள் மூலம் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் பணிகளின் உச்சமாக உரைகள், படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில் தகவலைப் பெற்று பாடப்பொருள்களை எளிதாகப் புரிந்து கொள்ளவும், பெற்ற தகவல்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பத்துடன் பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்கவும் 8,180 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs) ரூ.519.73 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ரூ.455.32 கோடி மதிப்பீட்டிலும் 46,12,742 மாணவர்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
6023 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் 5 மற்றும் 6 Mbps இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், மாணவர்களின் கற்றல் கற்பித்தலை எளிமையாக்கும் பொருட்டு பாடப் பொருள்கள் அனைத்தும் காணொளி வாயிலாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.