தமிழ்நாடு

tamil nadu

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இனிதே நிறைவு: 4 நாட்களில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை! - Kite FESTIVAL 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 8:14 AM IST

Kite Festival 2024: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சர்வதேச காற்றாடி திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. இதில், 250 காற்றாடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

காற்றாடி திருவிழா
காற்றாடி திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில் சர்வதேச காற்றாடி விழா 3வது ஆண்டாக கடந்த 15ஆம் தேதி துவங்கியது. இவ்விழாவினை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காற்றாடி திருவிழா (Credits - ETV Bharat Tamil Nadu)

சுமார் 4 நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச காற்றாடி திருவிழாவில் மலேசியா, ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காற்றாடி பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200க்கும் மேற்பட்டோர் நபர்கள் 10 அணிகளாக பிரிந்து 300க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்க விட்டனர்.

மேலும், சர்வதேச காற்றாடி விழாவில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து இந்த காற்றாடி விழாவை கண்டுகளித்தனர். இதில், பல வண்ணங்களில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்த பல விலங்குகள், தேசியக்கொடி, காளை மாடு, திமிங்கலம், கரடி, சேவல், கழுகு, சுறா மீன், பாம்பு, உள்ளிட்ட ராட்சத காற்றாடிகள் பறக்க விடப்பட்டது.

கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த காற்றாடி விழாவை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விழா நடத்தப்பட்டது. அப்போது 150 காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. இம்முறை 250 காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. கடற்கரை ஓரம் வானில் டால்பின் மீன்கள், ஆமை, டிராகன்கள், கம்பீரமான சுறாக்கள் உள்ளிட்ட காற்றாடிகள் பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது.

கடந்த ஆண்டு இந்த விழா பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு தொடர் விடுமுறை என்பதால் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த காற்றாடி விழாவை கண்டு ரசித்துள்ளனர். இவ்விழாவை காண வரும் பார்வையாளர்களுக்காக கோவளம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகள் திருவிடந்தை வரை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:‘தமிழ் வெல்லும்’.. “இதுவும் கலைஞரின் சாதனை தான்" - நாணய வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு! - Kalaignar commemorative coin

ABOUT THE AUTHOR

...view details