செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச மூன்றாவது காத்தாடி திருவிழா நேற்று வெகு விமரிசையாக துவங்கியது. வரும் 18ஆம் தேதி வரை என நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் விழாவில் தொழில் முறை பட்டம் பறக்கவிடும் வீரர்களால் பட்டம் பறக்க விடப்பட்டது. இதில் இந்தியா உள்பட பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது காத்தாடிகளை காட்சிப்படுத்தினர்.
அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த டால்பின் மீன்கள், ஆமை, டிராகன்கள், கம்பீரமான சுறாக்கள், காளை மாடுகள், விசித்திரமான ராட்சத காத்தாடிகள் காண்போரை வியக்க வைத்தது. இந்த காத்தாடி திருவிழாவை காண்பதற்கு 12 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இலவசமாகவும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய்க்கும் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு காற்றாடிகளை கண்டு ரசித்தனர். மேலும் கடந்த ஆண்டு இந்த திருவிழா பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் இதைவிட கூடுதலான பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.