மதுரை:சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சிபிஐ போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 காவலர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கயித்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனு செய்திருந்தார்.
அதில், தனது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா மார்ச் 7ஆம் தேதி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளதாகவும், சிறையில் தன் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் பட்சத்தில், எந்த ஒரு சாட்சியங்களையும் கலைக்க மாட்டேன் என உறுதி அளித்து, தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர் வெயில் முத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்திய சிதம்பரம், தனது மகளின் விசேஷ நிகழ்ச்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றுவோம் என உறுதி அளித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, “காவலர் வெயில் முத்துவிற்கு இன்று மாலை 6 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை உரிய காவல்துறை பாதுகாப்புடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!