திருச்சி:ஷார்ஜாவில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணால் உடலில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 1.485 கிலோ எடையுள்ள தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (ஜன.21) பறிமுதல் செய்தனர். இந்நிலையில் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்தார்கள் என்பன உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல உள்நாடுகளுக்கும் தொடர்ந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தில் சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஷார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், துபாய் ஷாா்ஜாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று வந்த, ஏா் இந்தியா விமானப் பயணிகளையும், அவரது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் ஆகியோர் வழக்கம் போல் சோதனையிட்டனா்.