திருச்சி:தேர்தல் பத்திரத்துடன், தேர்தலைச் சந்திப்பவர்கள் தோற்பார்கள், என இன்று (ஏப்.14) திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி பேசியுள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்குத் திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 19 ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் இந்திய அரசியல் சட்டம் நீடிக்க வேண்டுமா? அல்லது, மீண்டும் மோடி ஆட்சி ஏற்பட்டு மனுதர்மம் அரசியல் சட்டத்தின் இடத்தில் வந்து குந்திக்கொள்ள வேண்டுமா? என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய சவாலை இந்த நாடு சந்திக்கிறது.
சமத்துவத்திற்கு, சுயமரியாதைக்கு இடமில்லாமல் மாநிலங்களையே அழிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு எதையெல்லாம் போற்றி பாதுகாக்கச் சொன்னார்களோ, அந்த சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் இவை எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் மோடி ஆட்சி, மீண்டும் வரக்கூடாது என்ற அளவிலே இந்தியா கூட்டணியினர் ஒன்று கூடியிருக்கின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால் அம்பேத்கரின் அடித்தட்டான அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும்.