சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 50 மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் கடந்த மூன்று நாட்களாக குறைந்திருக்கிறது. குறிப்பாக நேற்று அது ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. எனவேதான், மழையின் அளவு குறைவாக பெய்தது மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது.
இதையும் படிங்க:ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை; தஞ்சையில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்!