சென்னை:தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரியில் கனமழை:இதில் நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 37 சென்டிமீட்டர் என்ற அளவில் கன மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் 24 சென்டிமீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இன்று தமிழ்நாட்டில் கனமழையும், கேரளாவில் மிகக் கனமழையும், கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் அதி கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பள்ளிப்பட்டு, செங்கல்பட்டு, குன்றத்தூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தற்கான வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.