சென்னை: இந்தியாவில் சமீபத்தில் வெளியான நீட் தேர்வில், வெளியிட்ட மதிப்பெண்களில் பல்வேறு குளறுபடி இருப்பதாக நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. மேலும், நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவிற்கு பல குளறுபடிகள் நடந்துள்ளதால், இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் அபுல்ஹாசன், கவுரவ மாநில செயலாளர் கார்த்திக் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "1,563 மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு வைப்பதால் இந்த முறைகேடுகளுக்குத் தீர்வு கிடைக்காது எனவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதற்கான காரணங்களையும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
பாட்னாவில் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நீட் கேள்வித்தாள் கசிவு சம்பந்தமாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. மாணவர்கள் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை புரோக்கர்களுக்கு கேள்வித்தாள்களை பெறுவதற்காகக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைப்பற்றிய விவரங்கள் மூடி மறைக்கப்படாமல் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
கேள்வித்தாள் கசிவு சம்பந்தமாக பல பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கேள்வித்தாள்கள் டெலிகிராம் மூலம் முதல் நாளே மாணவர்களுக்கு கிடைத்துள்ளது என்ற செய்தி மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குஜராத்தில் உள்ள கோத்ரா நகரில் உள்ள நீட் சென்டரில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.12 கோடி அளவிற்கு கோச்சிங் சென்டரில் இருந்து புரோக்கர்களுக்கு பணம் கைமாறியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
நீட் 2024 தேர்வில் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் நீட் 2023-ல் இரண்டு பேர் மட்டுமே 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். 2022-ல் ஒருவரும் 720 மதிப்பெண் பெறவில்லை. 2021-ல் மூன்று பேர் மட்டுமே 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆகவே இந்த முறை எப்படி இத்தனை பேர் 720 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது பற்றிய விசாரணையும் வேண்டும்.
பகதுருகன் என்ற சென்டரில் மட்டும் ஆறு மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளது எப்படி என்பதை பற்றியும் மாணவர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். 67 மாணவர்கள் 720 மதிப்பெண் பெற்றுள்ளவர்களில் மாணவர்களுக்கு கிரேஸ் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இந்த மதிப்பெண் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான விஷயம். அது பற்றியும் மாணவர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவர்களுக்கும் உண்மையை தெரியப்படுத்த வேண்டும்.
கேள்வித்தாள் கசிவு என்பது தொடர்ந்து மத்திய, மாநில அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் நடந்துவருவதாக மிகப் பெரிய அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 70 தேர்வுகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இதன் காரணமாக 1.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவர்கள் ஆசைப்பட்ட வேலைகளும், இந்த கேள்வித்தாள் கசிவு சம்பந்தமாக நின்று போய்விட்டது என்பதும் ஒரு வருத்தத்திற்குரிய செய்தி.
நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வின் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழந்துள்ளனர். போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகின்றன. நாட்டில் பல லட்சம் மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவராகும் கனவை இந்த நீட் தேர்வின் மூலமாக தான் அடைய வேண்டும் என்று நீட் தேர்வு மேல் மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். தற்போது, அவர்களுக்கு துரோகம் இழைக்கப்படக்கூடாது. ஆகவே, இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்நியன் Vs அம்பி.. செல்வப்பெருந்தகையின் இரட்டை பேச்சு விவகாரம்.. தலைவர்கள் ரியாக்ஷன் என்ன?