தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கு; கமல்ஹாசன் தரப்பு ஆஜராக உத்தரவு! - Indian 2 - INDIAN 2

CASE AGAINST INDIAN 2: இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படக்குழு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஜுலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், இந்தியன் 2 போஸ்டர்
மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், இந்தியன் 2 போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 3:04 PM IST

மதுரை:நடிகர் கமலஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மதுரை ஹெச்.எம்.எஸ் காலனியில் உள்ள வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அதற்காக தனது பெயரும் படத்தில் இடம் பெற்றது. ஆனால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் முதலாம் பாகத்தில் பயன்படுத்திய வர்மக்கலை முத்திரையை 2ம் பாகத்திலும் அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளார். ஆகவே, இந்தியன் 2 படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என ராஜேந்திரன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இம்மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், இயக்குநர் ஷங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். "வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 வர்மக்கலை புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டு உள்ளது. புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து இந்தியன் 1 படம் எடுக்கப்பட்டது.

ஆனால், இந்தியன் 2 படத்தில் எங்களை ஆலோசிக்காமல் வர்மக்கலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. புத்தகங்களை தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது. இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்கிறோம்" என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு நீதிமன்றத்தில் வாதாடினார். 'இந்தியன் 1 படத்தில் வர்மக்கலை தகவல் என ராஜேந்திரன் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு ஒரு தவறான வழக்கு. ஜுலை 11ஆம் தேதி இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்படும்.

வர்மக்கலை என்பது உலக அளவில் உள்ள ஒரு கலையாகும், அகஸ்தியர் கண்டுபிடித்தது வர்மக்கலை. இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் படத்திற்கும், வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை" என இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தில் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தரப்பு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - TN Lawyers Association elections

ABOUT THE AUTHOR

...view details