திருநெல்வேலி: நமது நாட்டில் அரசு விதிப்படி 18 வயது நிரம்பிய இளம் பெண்கள் திருமண வயதை எட்டியதாகக் கருதப்பட்டாலும், 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிக அளவு பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். இளம் வயதில் குழந்தை பெற்றெடுப்பதால் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்த விபரங்களைக் கண்டறிய மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், திருநெல்வேலி சுகாதாரத்துறை துணை இயக்குநருக்கு விண்ணப்பித்த நிலையில் அவர் அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1488 18 வயது நிரம்பிய இளம் பெண்களுக்குப் பிரசவம் நடைபெற்றுள்ளதாகவும், குறிப்பாக அதில் 1101 பிரசவங்கள் ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும், 347 பிரசவங்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.