சென்னை:கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் காய்கறிகள் வருகின்றன. அந்த வகையில், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பூண்டு வரத்து குறைந்துள்ளதால், பூண்டு விலை அதிகரித்து உள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது, மொத்த விற்பனையில் ரகத்தைப் பொறுத்து, 1 கிலோ பூண்டு 300 முதல் 320 ரூபாய் வரையும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.350 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு சந்தையில் உள்ள பூண்டு வியாபாரி நந்தகுமார் கூறுகையில், "5 வாகனம் பூண்டு வரும் நிலையில், 3 வாகனங்கள் மட்டுமே வருகின்றன. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. மேலும், தரமான பூண்டுகளை பதுக்கி வைத்துக்கொண்டு, சுமாரான பூண்டுகளையே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன" என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க:மார்கெட்டுக்குள் செல்ல முடியாதவாறு மணல் கொட்டி இடையூறு.. திருச்செந்தூர் வியாபாரிகள் குற்றச்சாட்டு!
அதேபோல், கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரும் மற்ற காய்கறிகளும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரி பாலாஜி கூறுகையில், "வழக்கமாக கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு 450 காய்கறி வாகனம் வரும் நிலையில், தற்போது 350 வாகனங்கள் தான் வருகிறது.
குறிப்பாக, பீன்ஸ் வரத்து குறைவால், கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.50 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.150க்கும், ஒரு கிலோ கேரட் ரூ.40க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெண்டைக்காய், சௌசௌ உள்ளிட்ட காய்கறிகள் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது மற்றும் ஒரு கிலோ பாகற்காய் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் காய்கறி வரத்து குறைந்துள்ளதாகவும், அதனால் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரி பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கால்நடைகளுக்கும் வெக்கை வாதம்: தற்காத்துக்கொள்ள சில வழிகாட்டுதல்கள்.!